மாவட்ட ஆட்சியரை எச்சரித்த மத்திய நிதி மந்திரி

தெலுங்கான, செப் 3- மாநிலத்தின் ஜஹீராபாத் பாராளுமன்ற தொகுதியில் நேற்று நடைபெற்ற மத்திய அரசின் நலத்திட்ட நிகழ்ச்சியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். பின்னர் அவர் அங்குள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காமரெட்டி மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீலிடம், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச அரிசியில், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எவ்வளவு பங்கு உள்ளது என அவர் கேள்வி எழுப்பினார். அது குறித்து மாவட்ட ஆட்சியர் தடுமாற, பதில் அளிக்க அவருக்கு அரைமணி நேரம் அவகாசம் அளிப்பதாக மத்திய நிதி மந்திரி தெரிவித்தார்.பின்னர் பேசிய அவர், வெளிச்சந்தையில் தோராயமாக ரூ.35க்கு விற்கப்படும் அரிசி, ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது என்றார். இதில் மத்திய அரசு 30 ரூபாயும், மாநில அரசு 4 ரூபாயும் வழங்குவதாகவும், ரேஷன் கடை பயனாளிகளிடம் ஒரு ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் மாநில அரசு மற்றும் பயனாளியின் பங்களிப்பு இல்லாமல் அந்த அரிசியை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படத்தை ஏன் காணவில்லை. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் ​​அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.