மாவோயிஸ்டு பாதித்த பகுதியில் 12 ஜோடிகளுக்கு திருமணம்

சுக்மா, ஜன.9-
சத்தீஷ்காரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பல பகுதிகள் காணப்படுகின்றன. இவற்றில் சுக்மா மாவட்டத்தில் அவர்கள் தீவிரமுடன் செயல்பட்டு வருகின்றனர்.
வீரர்கள், பொதுமக்கள் மீது தாக்குதல், அரசியல்வாதிகள் கடத்தல், வெடிகுண்டு தாக்குதல் சம்பவமும், கடந்த காலத்தில் நடந்துள்ளது. இதனால், அந்த பகுதி கிராம மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வந்தனர். மாவோயிஸ்டுகளை காட்டி கொடுக்கும் கிராமவாசிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதனால், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சீருடையில் பார்க்கும் மக்கள் பயத்தில் ஒதுங்கி போனார்கள். இந்த நிலையில், மாவோயிஸ்டுகள் பாதித்த பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். இதற்கு பலன் கிடைத்தது. இந்த நிலையில், சுக்மா மாவட்டத்தின் தலைமையகத்தில் 12 ஜோடிகளுக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் முன்னிலையில் பெரிய அளவில் திருமணம் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் சில வீரர்கள் மணமகளின் சகோதரியாகவும், ஒரு சிலர் மணமகனின் உறவினராகவும் மாறினார்கள். மணமக்களுக்கு அன்பளிப்புகளையும் வழங்கினர். ரூ.1,100 மற்றும் 12 ஜோடி புடவைகளையும் தம்பதிக்கு பரிசாக அளித்தனர்.
புதிதாக மணமுடித்த தம்பதியினரை சி.ஆர்.பி.எப். படையின் தளபதி டி.என். யாதவ் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் ஹாரிஸ், வாழ்த்துகளை தெரிவித்து கொண்டதுடன் இது ஒரு நல்ல தொடக்கம் என குறிப்பிட்டார். வருங்காலத்திலும் இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகள் தொடர வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் கூறினார்.