மாஸ்கோ செல்லும் பாலஸ்தீன அதிபர் – உலக போர் அச்சம்

மாஸ்கோ: இஸ்ரேல் போர் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், திடீர் திருப்பமாகப் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ரஷ்யா செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை காலை யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென பாலஸ்தீன ஹமாஸ் படைகள் இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்தது. வெறும் 20 நிமிடத்தில் சரமாரியாக 5000 ஏவுகணைகளை வீசி தாக்கினர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் தாக்குதலை ஆரம்பித்தது. காசா பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திடீர் பயணம்: இதற்கிடையே பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் திடீரென ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு செல்ல உள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். ரஷ்யாவுக்கான பாலஸ்தீன தூதுவர் இந்தத் தகவலைக் கூறியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாகப் பாலஸ்தீன தூதர் அப்தெல் ஹபீஸ் நோஃபல் கூறுகையில், “பாலஸ்தீன அதிபர் ரஷ்யா வரவுள்ளார். இருப்பினும், இந்த பயணம் எப்போது நடைபெறும் என்பது குறித்து ரஷ்யா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் எனக் காத்திருக்கிறோம். அதிபர் மஹ்மூத் அப்பாஸின் இந்த பயணத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது” என்று அவர் தெரிவித்தார். முக்கியம்: மேலும், இரு தரப்பும் தினசரி தொடர்பிலேயே இருப்பதாகவும் இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து தகவல் பரிமாற்றங்கள் நடந்தே வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே காசா பகுதியை இஸ்ரேல் ராணுவப் படைகள் சுற்றி வளைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அங்கே எரிபொருள், தண்ணீர் மற்றும் உணவுகளுக்கும் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் பாலஸ்தீன அதிபர் ரஷ்யா செல்லவுள்ளதாக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
உலகப் போர் அச்சம்: இப்படி ஒரு பக்கம் அமெரிக்கா நேரடியாக இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து உதவிகளை அறிவித்து வருகிறது. அதேநேரம் மற்றொரு புறம் ரஷ்யாவும் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இப்படி இருபெரும் நாடுகள் இந்த போரில் உள்ளே வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. இதனால் எங்கே எடுத்து மீண்டும் உலகப் போர் ஏற்படுமோ என்ற அச்சமும் அதிகரிக்கிறது. இந்த இஸ்ரேல் போர் ஏற்கனவே சர்வதேச அளவில் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. கடந்த பல வாரங்களாகத் தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை போர் காரணமாக திடீரென அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. அதேபோல கச்சா எண்ணெய் விலையும் சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. போர் தொடரும்பட்சத்தில் இப்படி சர்வதேச அளவில் பல பாதிப்புகள் ஏற்படும்.