மா மகசூல் 60% பாதிப்பு

கிருஷ்ணகிரி: நவ.2- கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி பகுதியில் நிகழாண்டில் இடைப்பருவ மா விளைச்சல் 60 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு டன் மாங்காய் ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இங்கு சுமார் 34 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் மாங்கனிகள் மிகவும் சுவையாகவும், தரமாகவும் உள்ளதால் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மா சாகுபடியைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் ஜனவரி வரை மா மரம் பராமரிப்பு பணி நடைபெறும். அதன் பின்னர் மருந்து தெளித்து மரங்கள் பராமரிக்கப்படும். தொடர்ந்து, தை மாதத்தில் பூக்கள் பூக்கும். ஏப்ரல், மே மாதங்களில் மா சீசன் தொடங்கி ஜூன், ஜூலையில் சீசன் முற்றிலும் நிறைவடையும்.
இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாவட்டத்தில் பல விவசாயிகள் இடைப்பருவ மா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். சீசனை விட இடைப்பருவ மா மகசூல் அதிகரிப்பும், நல்ல வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, நிகழாண்டில் இடைப் பருவ பூக்கள் பூக்கத் தொடங்கிய போது பெய்த மழையால் 60 சதவீதம் மகசூல் குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.