மின்சாரம் தாக்கி பலியானதொழிலாளியின் உடல் போலீசுக்கு தெரியாமல் புதைப்பு


மொரப்பூர்,ஏப்.22-
கடத்தூர் அருகே மின்சாரம் தாக்கி இறந்த தொழிலாளியின் உடலை போலீசாருக்கு தெரியாமல் புதைத்ததால் 6 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
கடத்தூர் அருகே மின்சாரம் தாக்கி இறந்த தொழிலாளியின் உடலை போலீசாருக்கு தெரியாமல் புதைத்ததால் 6 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
கட்டிட தொழிலாளி
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள வடகரை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவர், கடந்த மாதம் 16-ந் தேதி ராமியணஅள்ளியில் வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி சுரேஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் கடந்த 14-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடலை குடும்பத்தினர், உறவினர்கள், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தெரிவிக்காமல் அங்குள்ள மயானத்தில் புதைத்தனர்.
உடல் தோண்டி எடுப்பு
இதுகுறித்து தென்கரைக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் கோபிநாதம்பட்டி கூட்ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதனிடையே நேற்று முன்தினம் சுரேசின் உடலை போலீசார் தோண்டி எடுத்து அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர் ஜெயந்தி தலைமையிலான மருத்துவக்குழுவினர் சுரேசின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அவருடைய உடல் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை அடக்கம் செய்த உறவினர்கள் ராஜாமணி (27), சேட்டு (60), கரியமால் (41) சக்திதாசன் (39) உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி இறந்த தொழிலாளியின் உடல் 6 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.