மின்வெட்டு பிரச்னை: பிரதமர் ஆலோசனை

புதுடில்லி, அக். 13- கடும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக பல மாநிலங்கள் கூறிஉள்ள நிலையில், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். ”யாரும் பயப்படத் தேவையில்லை,” என, மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியுள்ளார்.
நிலக்கரி வாயிலாக மின் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையங்களில் சில நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதாகவும், கடும் மின் வெட்டை சந்திக்கும் அபாயம் உள்ளதாகவும் பல மாநிலங்கள்கூறியுள்ளன. தமிழகம், டில்லி, பஞ்சாப், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கூடுதல் நிலக்கரி கேட்டு மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளன.இந்தப் பிரச்னை தொடர்பாக மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், நிலக்கரித் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆகியோருடன், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அதில், அமைச்சர்கள் ஆர்.கே.சிங், பிரஹலாத் ஜோஷி மற்றும் துறைச் செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிலக்கரி கையிருப்பு நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு
அதிகாரிகள் விளக்கி உள்ளனர்.இந்த சந்திப்புக்குப் பின் அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியுள்ளதாவது:
சர்வதேச அளவில் நிலக்கரியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் இறக்குமதி செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் நிலக்கரி சுரங்கங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதனால், அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியை அனுப்புவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
பயம் தேவையில்லைநம்மிடம் போதிய அளவில் நிலக்கரி உள்ளது. அதனால் மின் வெட்டு ஏற்படும் என்ற பயம் தேவையில்லை.அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை அனுப்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் மட்டும் 19.5 லட்சம் டன் நிலக்கரி அனுப்பப்பட்டுள்ளது. பருவ மழை குறைந்ததும் 21ம் தேதிக்குப் பின் அதிக அளவில் நிலக்கரி அனுப்பப்படும் இவ்வாறு அவர் கூறினார்.