மின் உற்பத்தி முழுமையாக நிறுத்தம்

மேட்டூர்: மே 27- தமிழகத்தில் பரவலாக பெய்யும்கோடைமழை காரணமாக மின்சாரப் பயன்பாடு குறைந்துள்ளதால், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் 840, இரண்டாவது பிரிவில் 600 என மொத்தம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது, தொடர் மழை மற்றும் சீதோஷ்ண நிலை மாற்றம்காரணமாக மின்சாரத் தேவை குறைந்துள்ளது.
இதனால், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நேற்று முன்தினம் முதல் பிரிவில் 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அன்று இரவு 2-வது பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது.
முதல் பிரிவில் 4-வது அலகில் மட்டும் 165 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வந்த நிலையில், நேற்று காலை முதல் அதிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து மின் நிலைய அதிகாரிகள் கூறும்போது, “கடந்தசில நாட்களாக பெய்த கோடைமழையின் காரணமாக மின்சாரப் பயன்பாடு குறைந்துள்ளது. தற்போது காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும். சோலார் மற்றும் நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்திமுழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரப் பயன்பாடு அதிகரிக்கும்போது, மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும்” என்றனர்.