மிஸ் கூவாகம் அழகி போட்டி

விழுப்புரம்: ஏப் 23- விழுப்புரத்தில் திருநங்கைக ளுக்கான அழகி போட்டி நடைபெற்றது. இதில் ‘மிஸ்கூவாகம்-2024’ பட்டத்தை ஈரோட்டைச் சேர்ந்த ரியா தட்டிச் சென்றார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். திருநங்கைகள் பூசாரி கைகளால் தாலி கட்டிக்கொண்டு வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். பின்னர் கூத்தாண்டவர் தேரோட்டம் நடைபெறும். கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் வருவார்கள்.
அரசு சார்பில் அவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் அமைப்பு, தொண்டு நிறுவனங்கள் இணைந்து மிஸ் கூவாகம் போட்டியை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்காக ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர். அவர்களுக்கு நேற்று முன்தினம் சென்னை திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கலை நிகழ்ச்சியும், மிஸ் கூவாகம் அழகி போட்டியும் நடத்தப் பட்டன. அதில் சென்னையைச் சேர்ந்த ஷாம்சி முதலிடத்தை பிடித்து மிஸ் கூவாகம் அழகி பட்டத்தை வென்றார்.
2-வது இடத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த வர்ஷா ஷெட்டி, 3-வது இடத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சுபப்பிரியா பிடித்தார். இதைத் தொடர்ந்து நேற்று தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை இணைந்து ‘மிஸ் கூவாகம் – 2024’ அழகி போட்டி மற்றும் திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற திருநங்கைகள் பலர் ஆடிப்பாடி திறமைகளை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து ‘மிஸ் கூவாகம்-2024’ அழகி போட்டி நடைபெற்றது. மூன்று சுற்றுகள் வாரியாக போட்டிகள் நடைபெற்றன. முதல் சுற்றில் 27 திருநங்கைகள் ஒய்யாரமாக நடந்து வந்தனர். திருநங்கைகளின் நடை, உடை, பாவனை அடிப்படையில் 15 பேரை ஒருங்கிணைப்புக் குழு தேர்வு செய்தது. இரண்டாம் சுற்றில் தேர்வு பெற்ற 15 பேரில் 7 பேர் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நேற்றிரவு நகராட்சி திடலில் ‘மிஸ் கூவாகம்-2024’ அழகி போட்டிக்கான இறுதிச் சுற்று நடைபெற்றது.