மீட்பு குழுவினருக்கு குவியம் பாராட்டு

சென்னை: நவ.30-
உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக 17 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் நேற்று முன்தினம் இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்பு குழுவின
ருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதில் தேசம் மகிழ்கிறது. அயராத மீட்பு குழுவால் பெருமை கொள்கிறோம். விலைமதிப்பற்ற உயிர்களை காக்க இயன்ற அனைத்து வளங்களையும் வழிநடத்திய பிரதமருக்கு சிறப்பு நன்றி.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்டவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
முதல்வர் ஸ்டாலின்: 17 சவாலான நாட்களுக்கு பிறகு, சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டதை அறிந்து நிம்மதி அடைகிறேன். மீட்பு பணியில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டு, திடத்துடன் போராடி தொழிலாளர்களை மீட்ட நமது மீட்பு குழுவினர் மற்றும் ‘எலி வளை’ சுரங்க வல்லுநர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். மீட்கப்பட்ட 41 தைரியமிகு தொழிலாளர்களும், குடும்பத்தினரும் உறுதிபடைத்த மனத்துடன் இதில் இருந்து தேறிட விழைகிறேன்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: இது நம் தேசத்தின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி. இதற்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. மீட்கப்பட்டவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று இல்லம் திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. மீட்பு குழுவினருக்கு பாராட்டுகள். தேவையான உபகரணங்களை தக்க நேரத்தில் வழங்கிய உத்தராகண்ட் முதல்வர், பிரதமர் உள்ளிட்டோருக்கு நன்றி.பாமக தலைவர் அன்புமணி: உயிரை பணயம் வைத்து தொழிலாளர்களை மீட்ட குழுவினருக்கு அதற்குரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தொழிலாளர்கள் மீட்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களுக்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்களை மீட்பு குழு வழங்கியது பாராட்டுக்குரியது. .
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.