மீண்டும் ஆட்சி அமைக்க உதவிய 2 முடிவுகள்

புதுடெல்லி: ஜூன் 5-
நாடாளுமன்ற மக்களவைத் தேர் தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. எனினும், பாஜக எடுத்த 2 முடிவுகள்தான் இப்போது ஆட்சி அமைப்பதற்கு பேருதவியாக அமைந்துள்ளது.
முதலாவதாக, என்டிஏ கூட்டணியில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியை (டிடிபி) மீண்டும் இணைத்து கொண்டது முக்கிய முடிவாக பார்க்கப்படுகிறது. ஆந்திராவைச் சேர்ந்த டிடிபியும் ஜெகன் மோகன் தலைமையிலான ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸும்பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கின. எனினும், டிடிபியை இணைத்துக்கொள்ள பாஜக முடிவு செய்தது.
இந்தக் கூட்டணி அங்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அத்துடன் மக்களவைத் தேர்தலிலும் இக்கூட்டணி அமோகவெற்றி பெற்றுள்ளது.
இரண்டாவதாக, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியைஎன்டிஏ கூட்டணியில் இணைத்ததும் முக்கிய முடிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம்-காங்கிரஸ் மற்றும் என்டிஏ என 2 முறை கூட்டணி மாறிய நிதிஷ் குமாரை மீண்டும் சேர்க்க மாட்டோம் என பாஜக கூறியிருந்தது.இதனிடையே, மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நிதிஷ் குமார் கட்சியை மீண்டும் கூட்டணியில் இணைத்துக் கொண்டது என்டிஏ.