மீண்டும் ஆட்சி பிஜேபி தீவிரம்

பெங்களூர் : செப்டம்பர். 10 – தொட்டபள்ளாபுராவில் நடந்து வரும் பி ஜே பி அரசின் சாதனைகளின் மக்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டில் பி ஜே பி தன் மாபெரும் சக்தியை வெளிப்படுத்தியிருப்பதுடன் மக்களுடன் இணைந்து அடுத்த தேர்தலுக்கு பி ஜே பி பெருமளவில் ஆதரவை திரட்டுவதில் முற்பட்டுள்ளது. எதிர்வரும் மாநில சட்டமன்ற தேர்தலுக்கு மாபெரும் தயார் பணிகளில் ஈடுபட்டுள்ள பி ஜே பி தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள லட்சக்கணக்கான தொண்டர்களின் உற்சாகம் மற்றும் கொண்டாட்டங்களுக்கு இடையேயும் அடுத்த தேர்தலில் கட்சியை ஜெயிக்க வைத்து மீண்டும் மாநிலத்தில் பி ஜே பி ஆட்சியை கொண்டு வர உறுதிபூண்டுள்ளனர். அடுத்த தேர்தலில் பழைய மைசூர் பகுதியில் அதிலும் குறிப்பாக கோலார் , சிக்கபள்ளாபுரா , மாவட்டங்களில் பி ஜே பியின் இடங்களை அதிகரித்து கட்சியை பலப்படுத்த தொட்டபள்ளாபுராவில் “மக்களால் மக்களுக்காக பி ஜே பி மக்கள் ஒருங்கிணைப்பு “
என்ற கோஷத்துடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதுடன் , முதல்வர் பசவராஜ் பொம்மை , முன்னாள் முதல்வர் பி எஸ் எடியூரப்பா , மாநில பி ஜே பி தலைவர் நளீன் குமார் கட்டீல் , மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி , மாநில பி ஜே பி பொறுப்பாளர் அருண் சிங்க் , தவிர இந்த பிரம்மாண்ட மாநாட்டிற்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சர் சுதாகர் உட்பட மாநில அமைச்சரவையின் பெரும்பாலானவர்கள் இன்றைய மாநாட்டில் கலந்து கொண்டு அடுத்த தேர்தலுக்கான தயாரிப்பு பணிகளுக்கு உற்சாகம் அளித்திருப்பதுடன் மாநாட்டிற்கும் உற்சாகத்தை கூட்டியுள்ளனர். மாநில அரசின் வளர்ச்சிகள் குறித்து லட்ச கணக்கில் சேர்ந்திருந்த தொண்டர்களுக்கிடையில் தெரிவித்த முதல்வர் பசவராஜ் பொம்மை பி ஜே பி ஆட்சியின் மூன்று ஆண்டு கால சாதனைகளை எடுத்து விளக்கினார். முதல்வராக எடியூரப்பா தன் இரண்டு ஆண்டுகளில் நடைமுறை படுத்திய மக்கள் ஆதரவு திட்டங்கள் , மேற்கொண்ட முக்கிய முடிவுகள் , மற்றும் பசவராஜ் பொம்மை தலைமையிலான ஒரு வருட ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட புதிய திட்டங்கள் ஆகியவற்றின் வளர்ச்சி என அனைத்தையும் முதல்வர் இழை இழையாக இந்த மாநாட்டில் விவரித்தார். தவிர அரசின் அடுத்த நோக்கம் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றை தெரிவித்ததுடன் , முன்வரும் நாட்களில் அரசு என்னென்ன செய்ய உள்ளது என்பது குறித்தும் வரை திட்டத்தை முதல்வர் இந்த மாநாட்டில் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் வேளாண்மை , தோட்டக்கலை , சுகாதாரம் , கல்வி , கிராம வளர்ச்சி , நீர்ப்பாசனம் , மகளிர் முன்னேற்றம் , அடிப்படை வசதிகள் , உட்பட பல்வேறு துறைகளில் நடந்துள்ள வளர்ச்சிகள் குறித்து விளக்கிய முதல்வர் பசவராஜ் பொம்மை பட்டியலின மக்கள் , பின்தங்கிய மக்கள் , சிறுபான்மையோர் நல திட்டங்களின் சாதனைகள் குறித்தும் தன் உரையில் மாநில மக்களுக்கு தெரிவித்துள்ளார்.