மீண்டும் கன்னடர்கள் மீது தாக்குதல்

விஜயபுரா : ஜூன். 4 – ஆந்திரபிரதேசத்தில் உள்ள புண்யஸ்தலமான ஸ்ரீசைலத்தில் கர்நாடக அரசு பஸ்ஸின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடந்துள்ளது. ஸ்ரீசைலத்தில் மீண்டும் கன்னடர் மீது கொடூரமான தாக்குதல்கள் நடந்திருப்பதுடன் இந்த சம்பவத்தில் காயமடைந்த கே எஸ் ஆர் டி சி பஸ் ஓட்டுநர் பசவராஜ் பிராதார் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர் உயிராபத்திலிருந்து தப்பியுள்ளார். சில விஷமிகள் கர்நாடகத்தின் விஜயபுரா டிப்போவை சேர்ந்த பஸ்ஸின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.

பின்னர் பஸ்ஸின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கியுள்ளனர். பஸ் ஓட்டுநர் பசவராஜ் பிரேதார் நேற்று நள்ளிரவு ஸ்ரீசைலம் பஸ் நிலையம் அருகில் பஸ்ஸை நிறுத்தியுள்ளார். பின்னர் உணவை முடித்து கொண்டு திண்ணையில் உறங்கிக்கொண்டிருந்த போது திடீரென பத்து முதல் பன்னிரண்டு பேர் கொண்ட கும்பல் கன்னடர்கள் குறித்து தகாத வார்த்தைகளால் திட்டி ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கியுள்ளனர். பஸ் ஓட்டுநர் உதவிக்காக அலறியுள்ளார். உடனே மற்ற ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வருவதைப்பார்த்த விஷமிகள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவத்தில் கே எஸ் ஆர் டி சி பஸ் ஓட்டுனரின் முகம் மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவர் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விஷமிகளுக்கு எதிராக ஸ்ரீசைலம் போலீஸ் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது. கடந்த மார்ச் 31 அன்று உகாதி பண்டிகை சமயத்தில் குடிநீர் பாட்டிலுக்காக கன்னடர் மீது தாக்குதல்கள் நடந்தது.

நினைவிருக்கும். இந்த நிலையில் கன்னடர் மீது குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது.