மீண்டும் புழல் சிறை

சென்னை: டிச-7 சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு கடந்த அக்டோபர் மாதம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை முடிந்து சிறையில் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து, கடந்த நவ.15-ம் தேதி செந்தில் பாலாஜிக்கு மீண்டும் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு. பின்னர் அங்கிருந்து அவர் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, செந்தில் பாலாஜிக்கு இசிஜி, எக்கோ, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், பல்வேறு ரத்தப் பரிசோதனைகள், நுரையீரல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவரது பித்தப்பையில் கொழுப்புச் சத்து சேர்ந்து கற்களாக மாறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீரானதால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து அவர் இன்று (டிச.07) காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அங்கிருந்து அவரை போலீசார் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.