மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம்

சென்னை: டிச. 18: எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.12,500-ம், படகு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது, எண்ணூர் கடல் முகத்துவார பகுதியில் எண்ணெய் கசிவு கலந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள 8 மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக, மீனவர்களின் படகுகள், வலைகள் உள்ளிட்டவை சேதம் அடைந்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்தது. எண்ணெய் கசிவை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வாழ்வாதாரம் பாதிப்பு: இந்நிலையில், இந்த எண்ணெய் கசிவால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தாழங்குப்பம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எண்ணெய் படலத்தால் சேதம் அடைந்த படகு மற்றும் வலைகளை சாலையில் போட்டனர்.