முகேஷ் அம்பானி-யின் ஜியோ வேர்ல்டு கார்டன்.. ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

மும்பை, மார்ச் 21- முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு திருமணம் நடைபெற்ற ஜியோ வேல்ர்டு கார்டன் தற்போது மும்பையில் ஆடம்பர நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதியாக மாறி இருக்கிறது.
இதன் மூலமே லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறது அம்பானியின் குடும்பம். மும்பையின் பாந்த்ரா குர்லா காம்பிளக்ஸில் அமைந்துள்ளது தி ஜியோ வேர்ல்டு கார்டன். இது 5 லட்சம் சதுர அடியில் செடிகள் மற்றும் பூக்களால் நிறைந்து கண்களுக்கு விருந்தளிக்கிறது.
பச்சை பசேலென சொர்க்கபுரியாக காட்சி தரும் இந்த ஜியோ கார்டனில் தான் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் ஸ்லோகா மேத்தாவுக்கு திருமணம் நடைபெற்றது. மேற்கு மும்பையில் உள்ள மிகப்பெரிய திறந்தவெளி மையம் தி ஜியோ வேர்ல்டு கார்டன். மரங்கள்,
குளங்கள்,
ஆங்காங்கே அமர இருக்கைகள் ஆகியவை இருப்பதால் நிகழ்ச்சிகள் நடத்த ஏதுவான இடமாக இருக்கிறது.
அதுமட்டுமின்றி சர்வதேச கலையரங்கம், ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், கலைநிகழ்ச்சிகளை நடத்தும் கூடங்கள், அலுவலகங்கள், வைஃபை வசதி , 2000 வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு பரந்து விரிந்த வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட சிறப்பு வசதிகளும் உள்ளது. புகழ்பெற்ற பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் இங்கு அரங்கேறியுள்ளன. லேக்மீ ஃபேஷன் வீக், அரிஜித் சிங்கின் இசை நிகழ்ச்சி, எட் ஷீரனின் கலை நிகழ்ச்சி போன்ற சர்வதேச நிகழ்வுகள் நடைபெற்ற புகழ்பெற்ற தளம் இது. இங்குள்ள ஜியோ வொண்டர்லேண்ட் கிராண்டான நிகழ்ச்சிகளுக்கு பெயர் போனது.
ஜியோ வேர்ல்டு கார்டனில் நிகழ்ச்சிகளை நடத்த நாளொன்றுக்கு 15 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தப்பட வேண்டும். இது தவிர வரிகளும் உண்டு.
திருமண நிகழ்வுகள் தொடங்கி சர்வதேச நிகழ்ச்சிகள் வரை மறக்க முடியாத ஒரு அனுபவத்தை பெற விரும்புபவர்கள் இந்த மையத்தை உடனே புக் செய்கின்றனர். தற்போது மும்பையில் உள்ள பணக்காரர்களின் திருமணங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு ஜியோ கார்டன் மிகவும் பிடித்த இடமாக மாறியுள்ளது.
இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாத நாட்களில் மக்கள் ரூ.10 கட்டணம் செலுத்தி உள்ளே சென்று சுற்றி பார்க்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. அம்பானி குடும்பத்தினரை பொறுத்தவரை மும்பையின் மிகப்பெரிய மையமாக ஜியோ வேர்ல்டை மாற்ற வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். அவர்களின் மகளான ஈஷா அம்பானியின் குழந்தைகளுக்கு முதல் பிறந்தநாளை இங்கே தான் கொண்டாடினர்.