முக்கிய குற்றவாளி கைது

ஜம்மு: ஜூன் 20
ஜம்மு-காஷ்மீரின் ரியாஸி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் கடந்த 9-ம் தேதி வந்த பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 33 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஹகீம் தின் என்பவரை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து ரியாஸி மாவட்ட சீனியர் போலீஸ் எஸ்.பி. மோஹித்தா சர்மா கூறியதாவது:தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் இவர் இல்லையென்றாலும், இவருக்குமுக்கியப் பங்கு உள்ளது. தீவிரவாதிகளுக்குத் தேவையான ஆயுதங்கள், பொருட்களை இவர் கொடுத்து உதவியுள்ளார் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். தொடர்ந்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில், இந்த வழக்கை தற்போது தேசிய விசாரணை முகமையிடம் (என்ஐஏ) மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லாவில் நேற்று பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காவல் துறை அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து இப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து, வேறு சில தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்று தேடிவருகின்றனர்காஷ்மீர் காவல் துறை கூறுகையில், “என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். போலீஸூம் பாதுகாப்புப் படையினரும் இதில் ஈடுபட்டனர். கொல்லப்பட்டதீவிரவாதிகள் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவர்கள் குறித்து விவரங்களை சேகரித்து வருகிறோம்” என்று நேற்று பதிவிட்டது. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் தொடர்ச்சியாக என்கவுன்ட்டரில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த திங்கள்கிழமை பண்டிபோரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நிகழ்த்திய என்கவுன்ட்டரில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.