முடங்கி கிடக்கும் விமான நிலைய விரிவாக்கம்

கோவை: அக். 16-
கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு 600 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள நிபந்தனை குறித்து விமான நிலைய ஆணையகம் பரிசீலித்து வருகிறது.நிலத்தை பெற காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் விரிவாக்க திட்டப் பணிகள் முடங்கியுள்ளன. கோவை சர்வதேச விமான நிலையத்தை ஆண்டுதோறும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் சராசரியாக 25 விமானங்கள் இயக்கப்படுகின்றன. உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
கோவை விமான நிலையத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு கடந்த 2010-ம் ஆண்டு 627 ஏக்கரில் விரிவாக்க திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. பல ஆண்டுகளாக முடங்கி கிடந்த இத்திட்டம், திமுக அரசு பொறுப்பேற்ற பின் நில ஆர்ஜித பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் வேகமெடுத்தன.
தற்போது 600 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு ஒப்படைக்க தயாராக உள்ளது குறித்து விமான நிலைய நிர்வாகத்திடம் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குத்தகை அடிப்படையில்தான் ஒப்படைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது.
நிலங்களை பெறுவது தொடர்பாக இதுவரை விமான நிலைய நிர்வாகம் தரப்பில் எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. தமிழக அரசு விதித்துள்ள நிபந்தனை குறித்து அவர்கள் தரப்பில் கடிதம் மூலம் ஏதேனும் தகவல் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டால் அது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
கொங்கு குளோபல் போரம் ( கேஜிஎப் ) இயக்குநர் நந்த குமார் கூறும்போது,‘‘கோவை மட்டுமின்றி ஒட்டுமொத்த கொங்கு மண்டல வளர்ச்சிக்கு விமான நிலை விரிவாக்க திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டியது மிக அவசியம். விமான நிலைய ஆணையகம் மற்றும் தமிழக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விரைவில் நிலங்களை பெற்று உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.