முதலிடத்துக்கு இந்தியா முன்னேற்றம்

புதுடெல்லி: மார்ச் 4:
நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.நியூஸிலாந்தில், ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்டடெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நிறைவடைந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணியை 172 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இதன்மூலம், ஐசிசி உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த நியூஸிலாந்து, 60 புள்ளிகள் பெற்று 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் இருந்த இந்தியகிரிக்கெட் அணி 64.58 புள்ளிகளுடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி 59.09 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.தரம்சாலாவில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட்போட்டி வரும் 7-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றியடைந்தால், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்துக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.