
விசாகப்பட்டினம்: அக்டோபர் 17- கர்நாடகா மற்றும் ஆந்திர அரசுகளுக்கு இடையே தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக கடந்த சில வாரங்களாக காரசார விவாதங்கள் நடந்து வருகின்றன. ‘பலவீனமான பொருளாதார சூழலை மறைக்க ஆந்திரா முயற்சிப்பதாக கர்நாடக அரசு கூறிய நிலையில், ‘ஆந்திர உணவு மட்டும் காரமில்லை. நாம் பெற்ற முதலீடுகளும் அத்தகையது தான். இதனால், அண்டை மாநிலத்தவர்கள் சிலர் எரிச்சலை உணருகின்றனர்’ என, ஆந்திர அரசு பதிலடி கொடுத்துள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, சரக்கு போக்குவரத்தை கையாளும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராஜேஷ் யபாஜி என்பவர், பெங்களூரு போக்குவரத்து நெரிசல் குறித்து கடுமையான விமர்சனங்களை சமீபத்தில் முன்வைத்தார்.பெங்களூரை விட்டு விரைவில் வெளியேறப்போவதாகவும் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், பெங்களூரு சாலைகள் மிக மோசமாக பராமரிக்கப்படுவதையும், குண்டும் குழியுமான சாலையால் விபத்துகள் அதிகரித்து வருவதையும் பொதுமக்கள் மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் விமர்சிக்க துவங்கின.என்ன பிரச்னை?
இந்த நேரத்தில் தான், பெங்களூரு நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் திறக்கும்படி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், அமைச்சருமான நாரா லோகேஷ் வெளிப்படையாக அழைப்பு விடுத்தார்.
ஆந்திராவை முதலீட்டிற்கான சிறந்த மாநிலமாக விளம்பரப்படுத்த துவங்கினார். இது, கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசை எரிச்சலடைய செய்தது. இரு மாநில தலைவர்களிடையே காரசார விவாதத்தை உருவாக்கியது.
நாரா லோகேஷின் கருத்து குறித்து கர்நாடக துணை முதல்வர் சிவ குமார் கடந்த வாரம் கூறுகையில், ‘பெங்களூரின் தொழில்நுட்பம், திறமை, புதுமை ஆகியவற்றை யாராலும் நிராகரிக்க முடியாது’ என்றார்.
கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, ‘ஆந்திராவின் பலவீனமான பொருளாதார சூழலை மறைக்கும் தீவிர முயற்சி இது’ என, காட்டமாக விமர்சித்தார்.















