முதல்வருக்காக அமைக்கப்பட்ட சாலை

கோவை: ஏப். 15:‍ கோவையில் இண்டியா கூட்டணி தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த முதல்வர் செல்வதற்காக புதிதாக சாலை அமைக்கப்பட்டது தொடர்பாக சமூக செயல்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சேலம் – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், கோவை மாவட்டம் நீலாம்பூரிலிருந்து மதுக்கரை வரை 26 கிலோ மீட்டர் தூர புறவழிச்சாலை எல் அன்ட் டி நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ளது. ஆறு வழிச்சாலையான தேசிய நெடுஞ்சாலையில், இந்த 26 கிமீ தூரம் மட்டும் இருவழிச்சாலையாக உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. காவல் துறையினரின் புள்ளிவிவரப்படி, கடந்த 2022-ம் ஆண்டு 55 பேரும், 2023-ம் ஆண்டு 120 பேரும் இந்த சாலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக, ராவத்தூர் பிரிவு, சிந்தாமணி புதூர், வெங்கிட்டாபுரம், செட்டிபாளையம், ஈச்சனாரி பிரிவு உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே,இரு வழிச்சாலையாக உள்ள 26 கிலோ மீட்டர் தூரத்தை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தரப்பில் நீண்ட வருடங்களாக மாநில, மத்திய அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.ஆனால், இச்சாலையை பராமரிக்கும் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் இன்னும் சில வருடங்களுக்கு உள்ளதால், அது முடியும் வரை சாலையை அகலப்படுத்த முடியாதுஎன அரசு நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 12-ம் தேதி இண்டியா கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் எல் அன்ட் டி புறவழிச்சாலை பகுதியில் நடைபெற்றது.
இதில், முதல்வரின் வாகனம் பொதுக் கூட்ட இடத்துக்கு செல்வதற்காக, புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது.
இது குறித்து சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, ‘‘எல் அன்ட்டி புறவழிச்சாலையை அகலப்படுத்தும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதே சமயம்,
இண்டியா கூட்டணியின் பிரச்சாரக் கூட்டம் நடந்த செட்டிபாளையம் எல் அன்ட் டி பைபாஸ் சாலையில் முதல்வரின் வாகனம் வர கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரதான சாலையை ஒட்டி கீழ் பகுதியில் புதிய தார்ச் சாலை மாநில நெடுஞ்சாலைத் துறையினரால் அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் வருகைக்காக தற்காலிகமாக சாலை அமைக்கும் நெடுஞ்சாலைத் துறையினர், இச்சாலையில் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல சாலையை அகலப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தியிருக்கலாம். அல்லது சாலை விரிவாக்கம் செய்யும் வரை இருசக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல பிரதான சாலையை ஒட்டி கீழே தற்காலிக தார்ச்சாலை அமைத்து கொடுத்திருக்கலாம்.பொது மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், முதல்வரின் வாகனம் செல்ல மட்டும் அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? இச்சாலையை விரைவில் விரிவாக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.