முதல்வருடன் அமித்ஷா ஆலோசனை

பெங்களூர்: ஆகஸ்ட். 4 – முன் வரும் நாட்களில் கட்சி மற்றும் ஆட்சி அளவில் பெரும் மாற்றங்கள் ஏற்பட உள்ளது என்ற பேச்சுக்கள் பி ஜே பியில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாநிலத்திற்கு விஜயம் செய்திருப்பது பல குதூகலத்தை கிளப்பியுள்ளது. ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள அமித் ஷா நேற்று நள்ளிரவு டெல்லியிலிருந்து பெங்களூருக்கு வந்திருப்பதுடன் அவருடைய மாநில விஜயம் பல அரசியல் கணிப்புகளுக்கு இடமளித்துள்ளது. அமித் ஷாவின் மாநில விஜய சமயத்தில் மீண்டும் கட்சி மற்றும் ஆட்சி மட்டத்தில் பல மாற்றங்கள் குறித்த விவாதங்கள் நடக்க இருப்பதுடன் சகஜமாகவே இவரின் சந்திப்பு பி ஜே பி வட்டாரத்தில் பல எதிர்பார்ப்புகளை உருவாகியுள்ளது. இதே வேளையில் அமைச்சர் பதவிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆசைகள் கட்சியில் மீண்டும் தலை தூக்கியுள்ளது. கட்சி மற்றும் ஆட்சி அளவில் நடக்க வேண்டிய மாற்றங்கள் குறித்து அமித் ஷா இன்று பிற்பகல் உணவு நேரத்தில் கட்சியின் சில தலைவர்களுடன் ஆலோசனை நடத்த வாய்ப்புகள் உள்ளது. அமித் ஷாவின் விஜயத்திற்கு பின்னர் மாநில அரசியலில் தற்போது கிசுகிசுக்கப்படும் சில மாற்றங்கள் குறித்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷா பிரதமர் மோதியிடமிருந்து ஏதோ செய்தியை கொண்டுவந்திருப்பதுடன் இந்த செய்தியை முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் கட்சியின் மாநில தலைவர் நளீன் குமார் கட்டீல் ஆகியோருக்கு தெரிவிக்க உள்ளார் என தெரியவருகிறது . அமித் ஷா பிரதமர் மோதியிடமிருந்து கொண்டு வந்துள்ள தகவல் என்னவாயிருக்கும் என்பது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று நள்ளிரவு நகருக்கு வந்திறங்கிய அமித் ஷாவை ஹெச் ஏ எல் விமான நிலையத்தில் கட்சியின் மாநில தலைவர் நளீன் குமார் கட்டீல் , உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா , ஆகியோர் வரவேற்றதுடன் நகரின் தனியார் ஓட்டலில் அமித் ஷா தற்போது தங்கியுள்ளார். இன்று காலை முதல்வர் பசவராஜ் பொம்மை அமித் ஷாவை தனியார் ஓட்டலில் சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளார். மங்களூரில் சமீபத்தில் நடந்த பி ஜே பி தொண்டர் பிரவீன் கொலைக்கு பின்னர் மாநில அரசு மேற்கொண்ட முடிவுகள் , இந்த கொலை விசாரணையின் வளர்ச்சி , என அனைத்தையும் முதல்வர் பசவராஜ் பொம்மை அமித் ஷாவின் கவனத்துக்கு கொண்டு வந்திருப்பதுடன் அவருக்கு இவை பற்றிய முழு விவரங்கள் அளித்துள்ளார் என தெரிகிறது . அமித் ஷாவுடன் சுமார் அரை மணி நேரத்திற்கும் அதிகமாக முதல்வர் பசவராஜ் பொம்மை தனியாக ஆலோசனை நடத்தியதுடன் தற்போதைய மாநில அரசியல் நிலவரங்கள் , கட்சியின் ஆட்சி முறையை வேகப்படுத்துவது மற்றும் கட்சியை ஒருங்கிணைப்பது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இன்று பல நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் அமித் ஷா இன்று மாலை டெல்லிக்கு திரும்புகிறார்.