முதல்வர் அறிவிப்பு குறித்து டி.கே. சிவகுமார் கருத்து

பெலகாவி : நவம்பர். 7 – தான் எரிபொருள் அமைச்சராக இருந்த கால கட்டத்தின் திட்டங்களை விசாரணை நடத்துவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து விசாரணை நடத்தட்டும். நான் அதை வரவேற்கிறேன் . ஆனால் நான் கண்ணை மூடி கொண்டு உட்காரவில்லை என மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். பெலகாவி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி கே சிவகுமார் எரிபொருள் துறை , நீர்ப்பாசன துறை என அனைத்தையும் விசாரணை நடத்தட்டும் என சவால் விடுத்தார். பி ஜே பி ஆட்சியில் என்னவெல்லாம் நடந்துள்ளது , 100 கோடிகள் மதிப்புள்ள திட்டங்களை 300 கோடி என்ற அளவில் செய்துள்ளனர். அதே போல் 300 கோடி மதிப்புள்ள திட்டங்களை 700 கோடி என குத்தகைக்கு விட்டுள்ளனர். இதற்க்கு இந்த மாவட்டத்திலேயே தேவையான அளவிற்கு உதாரணங்கள் உள்ளன. நான் கண்ணை மூடிக்கொண்டு அரசியல் நடத்த வில்லை. உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் 10 லட்ச கோடி முதலீட்டுக்கு கையெழுத்தாகியிருப்பதாக கூறுகிறார்கள். நேரம் வரட்டும் ,அனைத்திற்கும் பதிலளிக்கிறேன் . பி ஜே பியினர் என்னை சோனியா காந்தி , மற்றும் ராகுல் காந்தியை குற்றவாளிகளாக காட்டுகின்றனர். அரசியல் ரீதியாக பலத்துடன் வளர்ந்து வருபவர்களை இந்த நிலையில் குற்றம்சாட்டுகிறார்கள். எவ்வளவுக்கெவ்வளவு பலமடைகிறோமே அவ்வளவுக்கு துரோகிகள் உள்ளனர். பலசாலியாக இல்லையென்றால் பகைவர்களே இல்லை. பி ஜெ பி யினர் தங்களுக்கு யாரெல்லாம் அரசியல் ரீதியில் ஆபத்தானவர்கள் என தெரிகிறார்களோ அத்தகையவர்களுக்கு இது போன்ற தொல்லைகளை அளித்து வருகின்றனர். இவ்வாறு டி கே சிவகுமார் தெரிவித்தார்.