முதல்வர் கேஜ்ரிவால் வீட்டில் பெண் எம்.பி. மீது தாக்குதல்?

புதுடெல்லி: மே 14-
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க விசாரணைக் குழு ஒன்றை தேசிய மகளிர் ஆணையம் அனுப்ப உள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யும் டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான ஸ்வாதி மாலிவால், நேற்று காலை டெல்லி காவல் துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டார். டெல்லி முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அர்விந்த் கேஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளரால் தாம் தாக்கப்பட்டதாக புகார் கூறினார். இதையடுத்து டெல்லி போலீஸார் முதல்வர் கேஜ்ரிவால் வீட்டுக்குச் சென்றனர். சிறிது நேரத்தில் டெல்லி சிவில் லைன்ஸ் பகுதி காவல் நிலையத்துக்கு ஸ்வாதி மாலிவால் வந்தார். எனினும் அவர் புகார் எதுவும் அளிக்காமல் புறப்பட்டுச் சென்றதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையம் நேற்று ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “டெல்லி முதல்வர் இல்லத்தில் மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க உறுதியேற்றுள்ளது. டெல்லி காவல்துறையிடம் நீதி கோருவதுடன் விசாரணை குழு ஒன்றையும் அனுப்புகிறது. தவறு செய்தவர்களை அதற்கு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 நாட்களில் அறிக்கை அளிக்குமாறு டெல்லி காவல் துறைக்கு மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பும்” என்று தெரிவித்துள்ளது.