முதல்வர் துணை முதல்வர் விவகாரம் கார்கேவிடம் டி.கே.சிவகுமார் முறையீடு

பெங்களூரு, ஜூலை 5 கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் டி.கே.சிவகுமார் துணை முதல்வராக பதவி வகிக்கிறார். இந்நிலையில் உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா ஆகியோர் தங்களுக்கும் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினர்.
இதேபோல ஒக்கலிகா பிரிவை சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர் டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என ஊடகங்களில் வெளிப்படையாக பேசினர். இதற்கு சித்தராமையாவின ஆதரவாளர்களான அமைச்சர்கள் லட்சுமி ஹெப்பல்கர், பைரதி சுரேஷ், ஜமீர் அகமது கான் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலிடம் முடிவெடுக்கும்: இதனால் கடும் நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து சித்தராமையா, “முதல்வர் விவகாரத்தை பற்றி மடாதிபதிகள் கருத்து சொல்லக்கூடாது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் உரிய முடிவைஎடுக்கும். மேலிடத்தின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். ஊடகங்களில் இதை பற்றியெல்லாம் பேசி ஒன்றும் நடக்காது” என்றார்.இந்நிலையில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது, “முதல்வர், துணை முதல்வர் சர்ச்சையால் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற கருத்து மோதலை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன. எனவே அதுபற்றி யாரும் ஊடகங்களில் பேசக் கூடாது. மீறி பேசினால் நடவடிக்கை எடுக்க வேண்டும்”என வலியுறுத்தினார்.அதற்கு கார்கே, “இந்த விவகாரத்தில் கட்சி உரிய நேரத்தில் முடிவெடுக்கும். அதுவரை அமைச்சர்கள் இதனை வெளிப்படையாக பேசக்கூடாது” என தெரிவித்தார்.