முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா பயணம்

சென்னை : செப்டம்பர் 2 –
தென் மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், மாநில எல்லையோர விவகாரங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களின் தீர்வுக்காக தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும். மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இந்த கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் தென் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் பங்கேற்பதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு (2021) நவம்பர் மாதம் இந்த கூட்டம் திருப்பதியில் நடைபெற்றது.
இந்த ஆண்டு தென்மண்டல கவுன்சிலின் 30-வது கூட்டம் நாளை (சனிக்கிழமை) கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கின்றனர். தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் செல்கிறார். காலை 11.40 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்லும் அவர், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை பிற்பகலில் சந்திக்கிறார். அப்போது முல்லைப்பெரியாறு அணை விவகாரம் குறித்து விவாதிக்கிறார்.
அப்போது இரு தலைவர்களும் பேபி அணையை பலப்படுத்துதல், சிறுவாணி, நெய்யாறு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார்கள். ஏற்கனவே இது தொடர்பாக நீர்வளத்துறை செயலாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை, தொடர்ந்து அடுத்தடுத்த குழுக்கள் அமைப்பது குறித்தும் விவாதிக்க உள்ளனர். அதைத்தொடர்ந்து இன்று மாலை கேரள அரசின் சார்பில் நடைபெறும் கலை, இசை நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். பின்னர் திருவனந்தபுரத்தில் தங்கும் அவர், நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று தமிழகம் தொடர்பான கருத்துகளை எடுத்து வைக்கிறார். கூட்டம் முடிந்ததும், நாளை இரவு 7 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.