முதல்வர் ஸ்டாலின் ஓட்டு போட்டார்

சென்னை, ஜூலை 18- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12-ந்தேதியன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் தனிமைப்படுத்திக்கொண்டார். வீட்டு தனிமையில் இருந்தபோது மு.க.ஸ்டாலினுக்கு லேசான சளி மற்றும் இருமல் இருந்தது. இதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் மு.க.ஸ்டாலின் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனை அடிப்படையில், மு.க.ஸ்டாலின் கடந்த 14-ந்தேதியன்று காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேகமாக டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலையை 24 மணி நேரமும் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வந்தனர். இதனால் அவர் நல்ல முறையில் வேகமாக குணமடைந்தார். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக்கொண்டே தனது அன்றாட அலுவல் பணிகளையும் கவனித்து வந்தார். இந்த சூழலில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.
புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜ.க கூட்டணி) வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வாக்குசீட்டு முறையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை தலைமைச் செயலகம் அந்த வகையில் தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டசபை குழு கூட்ட அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து இன்று நடக்கும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள வாக்குப்பெட்டியில் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செலுத்தினார். அவரைத்தொடர்ந்து மாநில அமைச்சர்களும் வாக்களித்தனர். முன்னதாக ஜனாதிபதி தேர்தலில் நேரில் சென்று வாக்களிக்கிறேன் என்றும், இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட இருக்கிறது. அந்த மகத்தான கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வகையில், வீட்டிலிருந்தபடியே காணொலியில் உரையாற்றிட இருக்கிறேன் என்றும், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முழு உடல்நலத்துடன் பங்கேற்பேன் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.