முதல் டெஸ்ட்: வெற்றி வரலாறு படைத்த வங்கதேசம்

மவுன்ட்மாங்கானு, ஜன. 5- நியூசிலாந்து – வங்காளதேச அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நடந்து வருகிறது.
இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 328 ரன்கள் எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 3-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 401 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் 176.2 ஓவர்களில் 458 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. கடந்த 12 ஆண்டுகளில் நியூசிலாந்து மண்ணில் அதிக ஓவர்களை எதிர்கொண்ட வெளிநாட்டு அணி வங்காளதேசம் தான். நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டும், நீல் வாக்னெர் 3 விக்கெட்டும், டிம் சவுதி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து130 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி ஆட்ட நேரம் முடிவில் 63 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து 17 ரன் முன்னிலையுடன் தடுமாறுகிறது. அதிகபட்சமாக வில் யங் 69 ரன்களில் போல்டு ஆனார். ராஸ் டெய்லர் 40 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் நியூசிலாந்து அணி 74.4 ஓவர்களில் 169 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து 40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி வரலாற்று வெற்றியை ருசித்தது.