முதல் முறை எம்எல்ஏ.க்கள் 3 பேர் உட்பட 9 பேர் பதவியேற்பு

ராய்ப்பூர், டிச. 23- சத்தீஸ்கர் மாநிலத்துக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று கடந்த 13-ம் தேதி ஆட்சி அமைத்தது. முதல்வராக விஷ்ணு தியோ சாயும், துணை முதல்வர்களாக அருண் ஷா மற்றும் விஜய் சர்மா ஆகியோர் பொறுப்பேற்றனர். இந்நிலையில் சத்தீஸ்கர் அமைச்சரவை நேற்று விரிவுபடுத்தப்பட்டது.இதில் முதல் முறை எம்எல்ஏ.க்கள் 3 பேர் உட்பட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து அரசியலில் நுழைந்த ஓ.பி.சவுத்ரி, டேங்க் ராம் வர்மா, லட்சுமி ராஜ்வதே ஆகிய 3 பேரும் முதல் முறை எம்எல்ஏ.க்கள். 8 முறை எம்எல்ஏ.,வாக இருந்த பிரிஜ்மோகன் அகர்வால், முன்னாள் அமைச்சர்களாக இருந்த ராம்விசார் நேதம், கேதார் ஷியாப் மற்றும் தயால்தாஸ் பாகெல் ஆகியோரும் நேற்று அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இவர்களுக்கு ராஜ்பவனில் மாநில ஆளுநர் விஸ்வபூஷன் ஹரிசந்தன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளதால், இங்கு முதல்வருடன் சேர்ந்து 13 அமைச்சர்கள் இருக்கலாம். ஆனால் தற்போது அமைச்சரவையின் பலம் 12-ஆக உள்ளது. இவர்களில் 6 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். முதல்வர், தேநதம் மற்றும் கஷ்யாப் ஆகியோர் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.