முதியவர் தீக்குளிக்க முயற்சி

கோவை : ஜனவரி . 9 – சூலூர் பட்டணம் பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம் (64). இவர் பட்டா கேட்டு கடந்த இரண்டு வருடமாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெட்ரோல் கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்த சண்முகசுந்தரம் கலெக்டர் அலுவலகம் முன்பு தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரது கையில் இருந்த கேனை பிடுங்கி எறிந்து அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். பின்னர் அவரை முதலுதவி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதியவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மற்றொரு சம்பவம்: கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த மூதாட்டி மயங்கி விழுந்த சம்பவம் நடந்துள்ளது. கோவை கணபதி அடுத்த ராமராஜபுரம் பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி மனைவி பழனியம்மாள் (70). இவரது கணவர் இறந்துவிட்டார். வயது முதிர்வு காரணமாக கூலி வேலைக்கு செல்ல முடியாத நிலையில் தனக்கு அரசின் முதியோர் உதவித்தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க பழனியம்மாள் நேற்று வந்தார். அப்போது, அவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார்.
இதனை பார்த்த பொதுமக்கள், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூதாட்டியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மனு அளிக்க வந்த மூதாட்டி மயங்கி விழுந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வாரம்தோறும் நடைபெறும் மக்கள் குறைகேட்பு முகாமில் முதியோர் மனுவை பெறுவதற்காக தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்றும், அவசர சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.