முத்திரை கட்டணம் பல மடங்கு உயர்வு

சென்னை: மே 8: ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்டவற்றுக்கான முத்திரைக் கட்டணத்தை தமிழக பதிவுத்துறை பல மடங்காக உயர்த்தியுள்ளது.
கடந்தாண்டு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சட்டமுன்வடிவு அடிப்படையில், பிரமாணப்பத்திரம், ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான முத்திரைக் கட்டணத்தை தமிழக அரசு பலமடங்கு உயர்த்தியுள்ளது. மேலும் இந்திய முத்திரைச் சட்டத்தில் தமிழகத்துக்கு திருத்தங்களையும் செய்துள்ளது. இந்த திருத்தங்கள் கடந்த மே 3 முதல்அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பான அறிவிக்கை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தத்தெடுத்தலுக்கு முன்பிருந்த
ரூ.100 முத்திரைக் கட்டணமானது ரூ.1000ஆகவும், பிரமாணப்பத்திரம், உடன்படிக்கை ஆகியவற்றுக்கு முத்திரைக் கட்டணம் ரூ.20 என்பது ரூ.200ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சங்கம் பதிவுக்கான முத்திரைக் கட்டணம் ரூ.300 லிருந்துஒவ்வொரு ரூ.10 லட்சத்துக்கும் ரூ.500 என்றும், கிரையபத்திரம் ரத்துக்கு ரூ.50 ஆக இருந்த கட்டணம் ரூ.1000 ஆகவும், நகல் பத்திரத்துக்கு ரூ.20 ஆக இருந்த கட்டணம் ரூ.100 ஆகவும், பிரதி எடுத்தலுக்கு ரூ.25 ஆக இருந்த கட்டணம் ரூ.500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், ஒருவர் தான் மற்றொருவரிடம் வாங்கிய சொத்தை அவருக்கே திருப்பியளிப்பதாக இருந்தால், அது கிரைய பத்திரமாக கருதப்பட்டு வழிகாட்டி மதிப்பில் 7 சதவீத கட்டணம், 2 சதவீதம் பதிவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போதுரூ.1000-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சங்கத்துக்கான ஒப்பந்த பதிவுக்கு ரூ. 200 அல்லது ரூ.500 என இருந்த கட்டணம் ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் அல்லாத பாகப்பிரிவினைக்கு ஒவ்வொரு பாகத்துக்கும் 4 சதவீதம் என்பது, ஒவ்வொருபாகத்துக்குமான சந்தை மதிப்பில் 4 சதவீதம் என திருத்தப்பட்டுள்ளது.