முன்னாள் அமைச்சர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்

லக்னோ, நவ. 18- சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம்கான் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோடி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அசம்கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு உத்தர பிரதேச சிறப்பு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம்கான் மற்றும் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, உ.பி.யின் ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியில் இருந்து அசம் கானை தகுதிநீக்கம் செய்து பேரவை தலைவர் உத்தரவிட்டார். அசம்கானின் ராம்பூர் சதார் தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து அசம்கான் பெயர் நீக்கப்பட்டுள்ளது.