
மும்பை,மார்ச் 6-
லாத்தூரில் முன்னாள் மத்திய உள்துறை மந்திரியின் உறவினர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி சுடும் சத்தம் முன்னாள் மத்திய உள்துறை மந்திரி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் சிவ்ராஜ் பாட்டீல் மராட்டிய மாநிலம் லாத்தூரில் வசித்து வருகிறார். இவரது ‘தேவ்கர்’ வீட்டுக்கு அருகில் நெருங்கிய உறவினரான சந்திரசேகர் என்ற ஹன்மந்த்ராவ் பாட்டீல் (வயது81) வசித்து வந்தார். இவர் முன்னாள் உள்துறை மந்திரியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார். நீண்டகால உடல்நல பிரச்சினை காரணமாக ஹன்மந்த்ராவ் பாட்டீல் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை 8.30 மணியளவில் ஹன்மந்த்ராவ் பாட்டீல் அறையில் இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. உடனடியாக குடும்பத்தினர் ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது, ஹன்மந்த்ராவ் பாட்டீல் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். சம்பவம் நடந்த போது முன்னாள் மத்திய உள்துறை மந்திரியின் மகனும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்கொலை இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தினேஷ் தேவ்ரே உள்பட மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதில், ஹன்மந்த்ராவ் பாட்டீல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. முன்னாள் மத்திய உள்துறை மந்திரியின் உறவினர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் நேற்று லாத்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.