முன்பதிவு 15 நாளில் 15 லட்சம் தாண்டியது

டேராடூன்: மே 1: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோயில்களுக்கு பக்தர்கள் கோடை காலத்தில் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இது சார் தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் பாலராமர் கோயில் திறக்கப்பட்டது. இதனால், இந்த ஆண்டு சார் தாம் யாத்திரை செல்வோர் எண்ணிக்கை குறையும் என தகவல் வெளியானது.
இந்த ஆண்டு கேதார்நாத், கங்கோதிரி, யமுனோத்ரி கோயில்கள் வரும் 10-ம் தேதியும் பத்ரிநாத் கோயில் 12-ம் தேதியும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சார் தாம் யாத்திரைக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. 15 நாட்களில் முன்பதிவு எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பத்ரி-கேதார் கோயில் குழு தலைவர் அஜேந்திர அஜய் கூறும்போது, “சார் தாம் யாத்திரைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். முன்பதிவு செய்தவர்களை மட்டுமே கோயிலுக்குள் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்” என்றார்.
கடந்த 2023-ல் யாத்ரீகர்கள் வருகையில் பத்ரிநாத்தை பின்னுக்குத் தள்ளி கேதார்நாத் முதலிடம் பிடித்தது. கேதார்நாத்துக்கு 19.6 லட்சம், பத்ரிநாத்துக்கு 18.3 லட்சம், கங்கோத்ரிக்கு 9 லட்சம், யமுனோத்ரிக்கு 7.3 லட்சம் பேர் என மொத்தம் 54.2 லட்சம் பேர் சார் தாம் யாத்திரை மேற்கொண்டனர்.