மும்பையில் 4வது கொரோனா அலைக்கு வாய்ப்பு

மும்பை, ஜூன் 4- மும்பையில் 4வது கொரோனா அலைக்கு வாய்ப்பு இருப்பதால் தினமும் 30,000 பேருக்கு பரிசோதனை செய்ய மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. மராட்டியத்தில் மும்பை, தானே, புனே, நாசிக் ஆகிய நகரங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 750க்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு இலக்காகி உள்ளனர்.கொரோனா பாதிப்பிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 3,740ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் அவசர ஆலோசனைக்கு பின்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மும்பை மாநகராட்சி, கொரோனா கிருமியின் 4வது அலை வரும் ஜூலை மாதம் ஏற்படலாம் என்று கான்பூர் ஐஐடி நிபுணர்கள் கணித்துள்ளதை சுட்டிக் காட்டி உள்ளது. சமீப நாட்களாக மராட்டியத்தில் கொரோனா அதிகரித்து வருவதை பார்க்கும் போது 4வது அலை வரும் வாய்ப்பை மறுக்க முடியாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4வது அலை மற்றும் மழைக்கால தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் நிலைமையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மும்பையில் தற்போது தினமும் 8,000 பரிசோதனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில், அதனை 30,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை அறிக்கையை நோயாளிகளுக்கு ஆய்வகங்கள் நேரடியாக வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ள மும்பை மாநகராட்சி பரிசோதனை அறிக்கையை முதலில் மாநகராட்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.