ஓரே போட்டியில் 2’சூப்பர் ஓவர்’: பஞ்சாப் வெற்றி மும்பை தோல்வி

துபாய், அக்.18-
ப‌ஞ்சார்- மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஆட்டமும் டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் நடத்தப்ப்ட்டது. அதிலும் ஆட்டம் சமனில் முடிந்ததால் 2 வது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. இதில் அபாரமாக ஆடிய ப‌ஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சுடன் ப‌ஞ்சாப் அணி மோதியது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித்சர்மா மற்றும் டிகாக் களமிறங்கினர். நம்பிக்கை நட்சத்திரம் ரோகித் சர்மா 9 ரன்களிலும், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் டக்அவுட்டும் ஆகினர். 4 வது விக்கெட்டுக்கு ஆட வந்து இசான்கிஷனும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் டிகாக் மறுமுனையில் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். குருணால் பாண்ட்யா தன் பங்குங்கு 34 ரன்கள் அடிக்க மும்பை அணியின் ரன் விகிதம் ஏற துவங்கியது. பொல்லார்ட் 12 பந்தில் 34 ரன்களும், நாதன் கவுல்டர் நைல் ஆட்டமிழக்காமல் 12 பந்தில் 24 ரன்களும் அடித்தனர். அதிகபட்சமாக டிகாக் 53 ரன்கள் குவித்தார். மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
177 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ப‌ஞ்சாப் அணியின் நம்பிக்கை துவக்க ஆட்டக்காரர்களான ராகுல், மயங்க் அகர்வால் நல்ல துவக்கத்தை தந்தாலும் அணியின் ஸ்கோர் 33 ஆக இருந்தபோது மயங்க் அகர்வால் அவுட்டானார்.அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 24 ரன்களில் ராகுல் செகர் பந்து வீச்சில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 12 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்து அவுட்டாக ப‌ஞ்சாப் அணியின் ரன் வேகம் மந்தமானது. அடுத்து வந்த மேக்ஸ்வெல் வழக்கம்போல மோசமான பேட்டிங்கை ஆடி டக்அவுட்டானார். துவக்க ஆட்டக்காரரும் இந்த தொடரில் அதிக ரன்களை சேர்த்தவருமான ராகுல் நிலைத்து நின்று ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். இதனால் ப‌ஞ்சாப் அணி சரிவில் இருந்து மீண்டது. 51 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்த அவர் பூம்ரா பந்துவீச்சில் போல்டானார். பூம்ரா அபாரமாக பந்து வீசி 4 ஓவர்களில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 3விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கடைசி 2 ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தீபக் ஹூடா மற்றும் கிரிஸ் ஜோடர்ன் ரன்குவிப்பில் ஈடுபட்டனர். 19வது ஓவரில் இருவரும் அதிரடியாக அடி 13 ரன்கள் குவித்தனர். கடைசி ஓவரிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தினர். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜோர்டன் 1 ரன் எடுத்து ரன் அவுட் ஆக ப‌ஞ்சாப் அணி 176 ரன்கள் எடுத்து ஆட்டம் சமன் ஆனது. தீபக் ஹூடா 22 ரன்களுடனும் ஜோர்டன் 13ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். ஆட்டம் சமமான நிலையில் சூப்பர் ஓவர் துவங்கியது. இன்று நடந்த 2 போட்டிகளுமே சூப்பர் ஓவருக்குள் சென்றது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணிக்காக பூரனும்,ராகுலும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர் பூரான் ரன் ஏதும் அடிக்காத நிலையில் அவுட்டானார்.அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடாவும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்த பஞ்சாப் அணி 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. பூம்ரா சிறப்பாக பந்து வீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு எதிராக ஷமி ஓவர் வீசினார் அவரும் சிறப்பான முறையில் பந்து வீசினார். இருப்பினும் கடைசி பந்தில் 2ரன்கள் தேவைப்பட்ட போது 1ரன்கள் எடுத்து டிகாக் ரன் அவுட்டாக ஆட்டம் மீண்டும் சூப்பர் ஓவருக்குள் சென்றது. இந்தமுறை மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக் போலார்டும், ஹர்திக் பாண்டியாவும் களமிறங்கினர். பஞ்சாப் அணிக்காக ஜோர்டன் ஓவரை வீசினார். 4 பந்துகளில் மும்பை அணியின் ஸ்கோர் 9 ஆக இருக்கும்போது ஹர்திக் பாண்டியா அவுட்டானார். மும்பை அணி சூப்பர் ஓவரில் 11 ரன்கள் எடுத்தது. 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு 2 வது சூப்பர் ஓவரை ஆடிய ப‌ஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கெயிலும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். முதல் பந்திலே சிக்ஸ் அடித்த கெயில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மயங்க் அகர்வாலும் தனது முதல் பந்தில் பவுண்டரி அடிக்க பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. ஒரே ஆட்டத்தில் அடுத்தடுத்து சூப்பர் ஓவர் நடந்ததால் பரபரப்பாக அமைந்தது