மும்பை மருத்துவமனைக்கு ரிஷப் பந்த் மாற்றம்

மும்பை, ஜன . 5 – ரிஷப் பந்தை மும்பைக்கு மாற்றுவது தொடர்பான ஏற்பாடுகளை பிசிசிஐ செய்துள்ளது. டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ரிஷப் பந்த், ஏர்ஆம்புலன்ஸ் மூலமாக மும்பைக்குக் கொண்டு வரப்படுகிறார்.
25 வயதான ரிஷப் பந்த் கடந்த டிசம்பர் 30-ம் தேதி டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான ரூர்க்கிக்கு தனியாக காரில் சென்ற போது டெல்லி – டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கூடுதல் சிகிச்சைக்காக ரிஷப் பந்தை மும்பைக்கு அழைத்துச் செல்ல பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விடுத்துள்ள அறிக்கையில், “இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்தை மும்பை மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிசிசிஐ செய்துள்ளது. கடந்த டிசம்பர் 30-ம் தேதி கார் விபத்தில் சிக்கி டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பந்த், ஏர் ஆம்புலன்சில் மும்பைக்கு அழைத்து வரப்பட உள்ளார்.
தொடர்ந்து ரிஷப் பந்த், கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சிநிறுவனத்தில் அனுமதிக்கப்படுவார். அங்கு அவருக்கு, ஆர்த்ரோஸ்கோபி மற்றும் தோள்பட்டைகாயங்களுக்கான துறையின் இயக்குநர் டாக்டர் தின்ஷா பர்திவாலாவின் நேரடி மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்படும். இதன் ஒரு கட்டமாக ரிஷப் பந்தின் தசை நார் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.