மும்முனை தாக்குதலை சந்திக்கும் இஸ்ரேல்

காசா: அக்டோபர் . 12 காசா, லெபனான் மற்றும் சிரியாவிலிருந்து மும்முனை தாக்குதலை இஸ்ரேல் எதிர்கொள் கிறது. காசாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி ராக்கெட் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தினர். அதன் பின் இஸ்ரேலின் தென் பகுதியில் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்று பலரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேலிய விமானப்படை காசா நகரில் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டது. இந்தப் போரில் இஸ்ரேல் தரப்பில் உயிரிழப்பு 1,200 ஆக வும், காசா பகுதியில் உயிரிழப்பு 900-மாகவும் அதிகரித்துள்ளது. இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் தீவிரவாதிகள் 1,500 பேரை சுட்டுக் கொன்றுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. காசா பகுதியில் இஸ்ரேல் விமனப்படை நேற்று முன்தினம் இரவு நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் இதுவரை உயிரிழப்பு 3,600-ஐ நெருங்கியுள்ளது.
காசா எல்லைப் பகுதி முழுவதையும் இஸ்ரேல் ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. இருதரப்பினர் இடையே 5-வது நாளாக சண்டை நடந்து வருகிறது. இஸ்ரேல் போர் விமானங்களை கண்டறிய ஹமாஸ் தீவிரவாதிகள் பயன்படுத்திய நவீன கருவிகளை இஸ்ரேல் போர் விமானங்கள் அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித் துள்ளது.
இந்நிலையில் சிரியா எல்லையிலிருந்து இஸ்ரேல் பகுதி நோக்கி நேற்று முன்தினம் ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுதவிர லெபனான் எல்லையிலிருந்து ஹமாஸ்தீவிரவாதிகள் நேற்று முன்தினம் ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா தீவிரவாதி களின் இருப்பிடங்களை நோக்கி இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது.
ஒவ்வொரு குண்டுக்கும் ஓர் உயிர்: இஸ்ரேல் ராணுவ தாக்குதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகள் விடுத்துள்ள மிரட்டல் செய்தியில், ‘‘ எச்சரிக்கை விடுக்காமல், காசா பகுதியில் இஸ்ரேல் விமானப்படை குண்டு வீசுகிறது. இஸ்ரேல் வீசும் ஒவ்வொரு குண்டுக்கும், இஸ்ரேல் பிணைக் கைதி ஒருவரை கொல்வோம்’’ என கூறியுள்ளது. இஸ்ரேல் மக்கள் 150 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளோம் என ஹமாஸ் தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.
இஸ்ரேலில் அவசரநிலை அரசு: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, எதிர்க்கட்சி தலைவர் பென்னி கன்ட்ஸ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் யாவ் காலன்ட் ஆகியோர் இணைந்து அவசர நிலை அரசு உருவாக்க சம்மதித்துள்ளனர். இவர்கள் போர்க்கால அமைச்சரவையாக செயல்படுவர்.