முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

வடவள்ளி, நவ. 20-கோவையை அடுத்த மருதமலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருக பெருமானின் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 15-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் அதிகாலை 5 மணிக்கு கோ பூஜையும், தொடர்ந்து கோவில் நடை 5.30 மணிக்கும் திறக்கப்பட்டது. பின்னர் பால் பன்னீர் ஜவ்வாது சந்தனம் போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.
கந்த சஷ்டி விழாவின் 6-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு சண்முகார்ச்சனையும், 9 மணிக்கு யாகசாலை பூஜையும் நடக்கிறது. மதியம் 12 மணியளவில் உற்சவர் முருகப்பெருமானுக்கு சண்முகார்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள், மகாதீபாராதனையும் நடைபெறுகிறது.
மதியம் 2 மணிக்கு இடும்பன் கோவிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. மதியம் 3 மணியளவில் சுப்பிரமணியசாமி பச்சை நாயகி அம்மன் சன்னதியில் அன்னையிடம் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி, இதையடுத்து வீர நடன காட்சி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து சுப்பிரமணியசாமி வேலை பெற்றுக்கொண்டு சூரசம்ஹாரத்திற்கு ஆட்டுக்கிடா வாகனத்திலும் வீரபாகு குதிரை வாகனத்திலும் எழுந்தருளி முதலாவதாக தாரக சூரனையும், இரண்டாவதாக பானுகோபன் வதம், மூன்றாவதாக சிங்கமுகாசுரன் வதம், நான்காவதாக சூரபத்மன் வதம் ஆகியவை நடக்கிறது.
பின்னர் வெற்றி வாகை சூடுதல், சேவல் கொடி சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 4.30 மணி அளவில் சூரசம்ஹாரம் செய்த முருகப்பெருமானின் கோபத்தை தணிக்கும் விதமாக மகா அபிஷேகம் நடைபெறும். அதனைத்தொடர்ந்து மகாதீபாராதனை நடக்கிறது.
இதைத்தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) அதிகாலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கி 8.30 மணிக்கு யாக சாலையில் உள்ள கலச தீர்த்தங்களால் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான வள்ளி- தெய்வானை திருக்கல்யாண விழா நடைபெறுகிறது.
இதையடுத்து காலை 11 மணிக்கு வள்ளி-தெய்வானை சமேதராய் சுப்பிரமணியசாமி திருவீதி உலா நடக்கிறது.
வழக்கமாக சூரசம்ஹார விழா நடைபெறும் நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் மருதமலைக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும் நேரமான மதியம் 1 மணி முதல் 5 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மலைக்கோவில் செல்லும் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டிருக் கும். 5 மணிக்கு மேல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலைமீது அனுமதிக்கப்படுகிறார் கள். இதேபோல் திருக்கல்யாண நிகழ்ச்சியிலும் பக்தர் கள் கலந்து கொள்வதற்கு அனுமதி இல்லை. இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.