முழுமையாக புதையும் ஜோஷிமத்

டேராடூன், ஜன.13-
ஜோஷி மத் நகரமே முழுமையாக மண்ணில் புதைந்து விடும் என்பதற்கு ஆதாரமாக இஸ்ரோ செயற்கைக்கோள் படம் வெளியிட்டு அறிக்கையும் கொடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து ஜோசியம் நகரம் முழுமையும் உள்ள மக்களை வெளியேற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது
இஸ்ரோவின் புதிய செயற்கைக்கோள் படத்தில் இந்த அச்சம் வெளிப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தேசிய தொலை உணர் மையம் ஜோஷிமத்தின் செயற்கைக்கோள் படங்களையும், நிலச்சரிவு பற்றிய முதற்கட்ட அறிக்கையையும் வெளியிட்டுள்ளது, இது முழு நகரமும் மண்ணில் புதைந்து விடும் என்று கூறியுள்ளது.
படங்களில், ராணுவ ஹெலிபேட் மற்றும் நரசிம்மர் கோவில் உட்பட முழு நகரமும் ஒரு உணர்திறன் மண்டலமாக குறிக்கப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.
இஸ்ரோவின் முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில், அபாயகரமான பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதிகளில் உள்ள மக்களை முன்னுரிமை அடிப்படையில் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் நகரத்தில் ஏராளமான வீடுகள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. புதையும் நகரமாக மாறிய ஜோஷிமத்தில் உள்ள 2 பெரிய ஓட்டல் கட்டிடங்கள் சரிந்த நிலையில் உள்ளன. இதையடுத்து அப்பகுதி நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்த வீடுகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து, ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. முதற்கட்டமாக நகரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 2 பெரிய ஓட்டல்களை இடிக்க திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் இடிக்கப்படும் கட்டிடங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு தெளிவுபடுத்தவில்லை எனக்கூறி, கட்டிடங்களை இடிக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பத்ரிநாத் தாம் மாஸ்டர் திட்டத்தின்படி இழப்பீடு வழங்கக்கோரி ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஓட்டல் கட்டிடங்களை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து முதல்-மந்திரி தாமி ஜோஷிமத் அங்கு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தார். அப்போது தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என முதல்-மந்திரியிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1.50 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் நிவாரணம் வழங்க சமோலி மாவட்ட கலெக்டர் தலைமையில் 19 பேர் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பின்னர், ஆபத்தான கட்டிடங்களை இடித்து அகற்றும் பணியினை அதிகாரிகள் தொடங்கினர். முதற்கட்டமாக சரிந்த நிலையில் காணப்பட்ட ஓட்டல் மலாரி விடுதி உள்பட 2 ஓட்டல் கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு, போலீசார் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.