முழு கொள்ளளவை எட்டிய கேஆர்பி அணை – வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: அக்.11-
கே.ஆர்.பி அணையில் நீர் திறப்பால் 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 52 அடி உயரம் கொண்ட அணை, முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளதால் 4,249 கனஅடி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், ஒசூர் பகுதியிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கேஆர்பி அணையில் மொத்த கொள்ளளவான 52 அடியில், முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளதால் 4,249 கனஅடி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அணை முதல் சாத்தனூர் அணை வரை தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் அணையின் ஒழுங்குமுறை விதிகளின்படி தற்போது வினாடிக்கு 2000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழையின் காரணமாகவும் கிருஷ்ணகிரி அணையிலிருந்து வினாடிக்கு 4000 கனஅடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்படுவதாலும் அணையிலிருந்து வினாடிக்கு 4000 கன அடி அளவு வரை உபரி நீர் வெளியேற்றப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையின் அளவினைப் பொறுத்தும், சாத்தனூர் அணைக்கு மேலே உள்ள அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவை பொருத்தும் சாத்தனூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு மேலும் அதிகரிக்கலாம் என்பதால், தென்பெண்ணை ஆற்றின் இருகரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது என நீர்வளத்துறையின் மூலம் எச்சரிக்கை விடப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

R