முஸ்லிம் மன்னர் பெருமை பேசும் பாஜக

புதுடெல்லி: மே 17: பாஜக ஆளும் மூன்று மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் அதன் தலைவர்கள் ஹரியாணாவில் முஸ்லிம் மன்னர் ஆட்சி குறித்து பெருமை பேசி வருகின்றனர்.கடந்த ஆண்டு ஜுலையில் ஹரியாணாவின் மேவாத் பகுதியிலுள்ள நூ மாவட்டத்தில் மதக்கலவரம் வெடித்தது. இதற்குஅங்குள்ள விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம்நடத்திய ஆன்மிக ஊர்வலம் காரணமானது. இதில் இரண்டு போலீஸார் உட்பட 6 பேர் பலியாகினர். தொடர்ந்து இருவாரங்களுக்கு டெல்லிக்கு அருகில் உள்ள குருகிராமிலும் ஊரடங்கு உத்தரவு நீடித்தது. இதனால், அப்பகுதியில் வாழும் இந்து, முஸ்லிம்களுக்கு இடையே பதற்றம் எழுந்தது.
இதையடுத்து, மார்ச் 9-ல் நூவிற்கு ஹரியாணாவின் அப்போதய முதல்வர் மனோகர் லால் கட்டார் வந்திருந்தார். அங்குமேவாத் பகுதியை ஆண்ட முஸ்லிம் மன்னரான ஹசன் கான் மேவாத்தியின் சிலையை திறந்து வைத்தார். அத்துடன் அவரது பிறந்த நாளை ஹரியாணாவின் தியாகிகள் தினமாகவும் அறிவித்தவர், தம் தாய்நாட்டிற்காக உயிர்நீத்த முஸ்லிம் மன்னர் ஹசன் கானின் வீரத்திற்கு நான் தலை வணங்குகிறேன் என தெரிவித்தார்.
இந்த நிலையில், தற்போது மக்களவை தேர்தலில் குருகிராம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான ராம் இந்திரஜித் சிங்கும், தனது பிரச்சாரங்களில் மன்னர் ஹசன் கானைப் பாராட்டுகிறார்.
மத்திய இணை அமைச்சரான ராவ், “16-ம் நூற்றாண்டில், வெளிநாட்டிலிருந்து படையெடுத்து வந்த பாபரின் உத்தரவிற்கு நம் மேவாத்தி மன்னர் ஹசன் கான் அடிபணியவில்லை. அவரை எதிர்த்து பானிபட்டில் 12,000 குதிரைப்படை வீரர்களுடன் போரிட்ட இந்த ராஜ்புத் வீரர் மார்ச் 15, 1527-ல் உயிர்தியாகம் செய்தார் எனக் குறிப்பிட்டார்.
இதற்குமுன், பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்தலைவர் மோகன் பாகவத்தும், மன்னர் ஹசன் கானை பாராட்டினார். இவர், ராஜஸ்தானின் பரத்பூரில் நடந்த கூட்டத்தில், ஹசன் கானை போல் நம் நாட்டின் முஸ்லிம்கள் நம் தாய்நாட்டின் மீது பாசம் காட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இதுபோல், முஸ்லிம் மன்னரான ஹசன் கானை பாராட்டுவதன் பின்னணியில், பாஜக ஆளும் மூன்று மாநிலங்களில் முஸ்லிம்கள் அதிகம் இருப்பது காரணமாகக் கூறப்படுகிறது.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் மேவாத் எனும் பகுதி, ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தின் எல்லைகளில் அமைந்துள்ளது. ஹரியாணாவில் சுமார் 7 சதவீதம் இருக்கும் முஸ்லிம்கள் நூவில் மட்டும் சுமார் 80 சதவீதம் உள்ளனர். குருகிராமை உள்ளடக்கிய மக்களவை தொகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் 4 சட்டப்பேரவை தொகுதிகளும் உள்ளன. இங்கு 2009 முதல் எம்பியாக இருந்து போட்டியிடும் பாஜகவின் ராவ் இந்திரஜித்தை காங்கிரஸில் பாலிவுட் நடிகர் ராஜ் பப்பர் எதிர்க்கிறார்.