
மூணாறு : நவம்பர். 13 – மூணாறு பகுதிகளில் படையப்பா உள்ளிட்ட காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீடு, கார், ரேஷன் கடைகளை அடித்து நொறுக்கி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மூணாறு முற்றிலும் வனப்பகுதிகளால் சூழப்பட்ட ஒரு இடம் ஆகும்.இங்கு முக்கிய தொழில் தேயிலை விவசாயம். இதனால் மூணாறு எந்த காலநிலையில் பச்சை போர்வை போர்த்திய போல் காட்சி அளிக்கும் இடம் ஆகும்.இந்த தேயிலை விவசாயத்தை நம்பி இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
தொழிலாளர்களின் குடியிருப்புகள் நிலை கொள்வது வனத்தோடு சேர்ந்த பகுதிகளில் ஆகும்.மூணாறை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் காட்டு யானைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றி திரிவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.முன் காலங்களில் காட்டு யானைகள் சுற்றித்திரிந்தாலும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வந்து தொந்தரவு செய்வதில்லை.ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது தொழிலாளர்களின் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் மனிதர்களையும் தாக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இங்கு இரவு பகல் வித்தியாசம் இல்லாமல் சுற்றித்திரியும் யானைகளால் பொதுமக்களின் உயிருக்கும் சொத்திற்கும் பாதுகாப்பு அற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.சாந்தன்பாறை, சின்னக்கானல், மூணாறு, தேவிகுளம் ஆகிய பஞ்சாயத்துகளில் சுற்றித்திரியும் 5 காட்டு கொம்பன் யானைகள் தான் அதிக தாக்குதல் குணம் உடையவை. படையப்பா, அரிசி கொம்பன்,கணேசன்,முறிவாலன்,ஓஸ் கொம்பன் என்ற பெயர்களில் இந்த காட்டு கொம்பன் யானைகள் அழைக்கப்படுகின்றன.அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் பீதி கேரள மாநிலம், மூணாறை சுற்றி உள்ள எஸ்டேட் பகுதி குடியிருப்புகளுக்குள் யானைகளும் சுற்றித் திரிவதால் மக்கள் வெளியே தலைகாட்ட அச்சமடைகின்றனர். இப்பகுதியில் உள்ள தலையார் எஸ்டேட்டில் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானை அப்பகுதியில் இருந்த வாழை உட்பட விவசாய பயிர்களை நாசம் செய்தது. இதனால் அங்கிருந்த மக்கள் பீதியடைந்தனர். பின் வனப்பகுதிக்குள் சென்றது.அதுபோல் குண்டளை எக்கோ பாயின்ட் அருகே சாலையில் இறங்கிய யானை அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.பின் சாலையோர கடைகள், வாகனங்களை அடித்து நொறுக்கியது. இதனால் யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதே சமயம் சாலையில் நிற்கும் யானையை, வாகனங்களில் பின் தொடர்ந்து வீடியோ எடுப்பது, தண்ணீர் பாட்டில்கள் கொண்டு எறிவது, வாகனத்தின் ஹார்ன் சத்தத்தை அதிகளவில் எழுப்புவது போன்ற செயல்களை சுற்றுலாப்பயணிகள் செய்யக்கூடாது என வன அலுவலர்கள் கூறியுள்ளனர்.ரேஷன் கடைகளுக்கு குறி மூணாறில் தொழிலாளர்கள் வசிக்கும் எஸ்டேட் பகுதிகளில் ஒற்றை காட்டுயானை சுற்றித்திரிகிறது. இந்த யானை, விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன், அவ்வப்போது மூணாறு ரோட்டிலும் சுற்றித்திரிகிறது. சின்னக்கானல் எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடையை உடைத்து விற்பனைக்கு வைத்திருந்த அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை தின்று தீர்த்தது.நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு காட்டு யானையை வனத்திற்குள் விரட்டினர். கடந்த ஓராண்டில் இங்குள்ள கன்னிமலை, நயமக்காடு, கடலார், நல்லதண்ணி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ரேஷன் கடைகளை யானை அடித்து நொறுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.