மெக்சிகோவை புரட்டிபோட்ட ‘ஓடிஸ்’ சூறாவளி: 48 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ: அக். 31:
வட அமெரிக்க நாடான மெக்சிகோவை தாக்கிய ‘ஓடிஸ்’ சூறாவளியில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் சுமார் 36 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் ‘ஓடிஸ்’ சூறாவளி சில தினங்களுக்கு முன்பு கரையைக் கடந்தது. அப்போது அடித்த பலத்த காற்று மற்றும் மழை ஆகியவற்றால் அகாபுல்கோ பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இந்த புயலால் மக்களின் வீடுகள், வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், மின்கம்பங்கள், மரங்கள், மொபைல் டவர்கள் என ஏராளமானவை சேதமடைந்துள்ளன.
இதனால் மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர்.புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பார்ப்பதற்கே மிகவும் கொடூரமாக இருப்பதாக அங்கிருக்கும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ‘ஓடிஸ்’ சூறாவளியில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் சுமார் 36 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
அதோடு சுமார் 273,000 வீடுகள், 600 உணவகங்கள் மற்றும் 120 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன. மேலும் பல வணிக வளாகங்கள் இடிந்துள்ளன என்று அந்த நாட்டு அரசாங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகள் சூறையாடப்பட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதி முழுவதும் சுமார் 17,000 பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.