மெட்டாவெர்ஸில் விர்ச்சுவல் முறையில் பாலியல் சீண்டலுக்கு ஆளான சிறுமி

லண்டன், ஜன. 5- பிரிட்டன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் மெட்டாவெர்ஸில் விர்ச்சுவல் முறையில் கூட்டு பாலியல் சீண்டலுக்கு ஆளாகி உள்ளார். இது குறித்து அந்நாட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த சிறுமி மெட்டாவெர்ஸில் விஆர் ஹெட்செட் அணிந்து விர்ச்சுவல் முறையில் கேம் ஆடிய போது அவரது டிஜிட்டல் அவதாரை பாலியல் ரீதியாக யாரென தெரியாத சிலர் கூட்டாக வன்புணர்வு செய்துள்ளனர். இதனால் அந்த சிறுமிக்கு உடல் ரீதியாக காயம் ஏதும் இல்லை என்றாலும் அந்த செயலின் தாக்கத்தின் காரணமாக உளவியல் ரீதியாக அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தான் இந்த வழக்கில் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு. ஆனால், விர்ச்சுவல் குற்றங்களுக்கு தீர்வு காண்பதில் தற்போதுள்ள சட்டங்களின் நிலை குறித்த கேள்வியும் இங்கு எழுகிறது என அதிகாரிகளும், வழக்கறிஞர்களும் தெரிவித்துள்ளனர். விர்ச்சுவல் முறையிலான பாலியல் குற்றச்சாட்டு குறித்து போலீஸ் விசாரணையில் உள்ள முதல் வழக்கு இது என தகவல். இருந்தாலும் இதை சட்ட ரீதியாக விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையின்போது தள்ளுபடியாக வாய்ப்பு இருந்தாலும் இதன் தீவிரத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என பிரிட்டன் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த சிறுமி எந்த கேம் விளையாடிய போது பாலியல் சீண்டலுக்கு ஆளானார் என்ற விவரம் வெளியாகவில்லை. இதுமாதிரியான செயல்களுக்கு தங்கள் தளத்தில் அறவே இடமில்லை என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பயனர்கள் ‘பர்சனல் பவுண்டரி’ என்ற ஆட்டோமேட்டிக் பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்தி விர்ச்சுவல் முறையில் தெரியாதவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.