மெட்ரோ ரயிலில் சிற்றுண்டி சாப்பிட்ட நபருக்கு அபராதம்

பெங்களூரு, அக். 6- மெட்ரோ ரயிலில் சிற்றுண்டி சாப்பிட்ட‌ நபர் மீது வழக்கு பதிவு செய்து, ரூ. 500 அபராதத்தை விதித்து,
மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்குமாறு அவரை எச்சரித்துள்ளது. பெங்களூரு மெட்ரோ ரயிலில் பயணித்த பயணி ஒருவர் கோபி மஞ்சூரியன் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிஎம்ஆர்சிஎல்) நடவடிக்கை எடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. மெட்ரோ ரயிலில் விதிகளை மீறியதற்காக பயணிகளுக்கு ரூ.500 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. மெட்ரோ ரயிலுக்குள் உணவு உட்கொண்டதற்காக பயணி ஒருவருக்கு பிஎம்ஆர்சிஎல் பதிவு செய்து அபராதம் விதிப்பது இதுவே முதல் முறை என்று மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். “இந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த நபர் நம்ம மெட்ரோவில் வழக்கமான பயணி, ஜெயநகர் மற்றும் சம்பிகே சாலைக்கு இடையே பயணம் செய்கிறார். வீடியோவில், அவரது நண்பர்கள் மெட்ரோ ரயிலுக்குள் சாப்பிட வேண்டாம் என்று எச்சரிப்பதைக் கேட்க முடிகிறது. ஆனால் அவர் அதனை புறக்கணிப்பதை வீடியோரில் காண முடிகிறது. விதிகளை மீறியதால், அவர் மீது ஜெயநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது” என்று நம்ம மெட்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மெட்ரோ ரயில் நிலைய அதிகாரி கூறுகையில், “இதுபோன்ற நடத்தையை மீண்டும் செய்யமாட்டேன் என்று பயணி உறுதியளித்தார்.” ஆடியோ மற்றும் வீடியோ செய்திகள் மூலம், மெட்ரோ சேவைகளைப் பயன்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அதனை மீற வேண்டாம் என்று பயணிகளை கேட்டுக்கொள்கிறோம். செப்டம்பர் கடைசி வாரத்தில், மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் டிக்கெட் இல்லாமல் நுழைந்து, ரயிலில் பயணம் செய்ததற்காக யூடியூபர் ஃபிடியாஸ் பனாயிடோவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் விதிகளை மீறியதாக சமூக ஊடகங்களில் செய்தி வைரலாக பரவியது. இதனையடுத்து அவர் மீது கே.ஆர்.மார்க்கெட் போலீசில் மெட்ரோ ரயில் நிர்வாகம் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.