மெட்ரோ ரயில் சேவை வைத்து அரசியல் செய்யும் பிஜேபி காங்கிரஸ் குற்றச்சாட்டு

பெங்களூரு: அக்.11-
நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு கடந்த 9-ம் தேதி தொடங்கப்பட்ட பெங்களூரு மெட்ரோ ரயில் ஊதா வழித்தட சேவையை வைத்து பாஜக அரசியல் செய்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பெங்களூரு போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மெட்ரோ ரயில் சேவையின் பங்கு பெரியது.
பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்தின் சார்பில் பெங்களூருவின் வடக்கு, தெற்கு பகுதியில் பச்சை வழித்தடம் மற்றும் கிழக்கு, மேற்கு பகுதிகளில் ஊதா வழித்தடத்தை இயக்கி வருகிறது.
இதில் செல்லக்கட்டா முதல் கெங்கேரி வரையிலான 42.85 கிலோ மீட்டர் தொலைவை இணைக்கும் ஊதா நிற வழித்தடத்தில் கேஆர்.புரம் – பையப்பனஹள்ளி இடையேயான விரிவாக்க பணிகள் முடிந்த பிறகும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படாமல் இருந்தது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனால் ரயில் பயணிகள், ஐ.ஜி.ஊழியர்கள் சமூக வலைத்தளம் வாயிலாக ஒன்றிய, மாநில அரசுகளுக்கு கேள்விகளை எழுப்பினர். மெட்ரோ ரயில் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதியது. இதேபோன்று கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.பி.கள் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.
கடந்த 9-ம் தேதி கேஆர்.புரம் – பையப்பனஹள்ளி இடையேயானமெட்ரோ ரயில் சேவை திறப்பு விழா இல்லாமல் தொடங்கியது. வழக்கமான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி பெங்களூரு மக்களின் கொந்தளிப்பை உணர்ந்து இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்க வரவில்லை என்றும் ஆனால் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட மெட்ரோ ரயில் ஊதா வழித்தட சேவையை வைத்து பாஜக அரசியல் செய்வதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பெங்களூருவின் கேஆர்.புரம், பையப்பனஹள்ளி, செல்லக்கட்டா, கெங்கேரி இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டதன் மூலம் செல்லக்கட்ட இடையே 42.85 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஊதா நிற மெட்ரோ ரயில் சேவை முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த மெட்ரோ ரயில் சேவைக்கு அதிகபட்சமாக ரூ.60 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மேலும், இந்த வழித்தடத்தில் 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருவதாக பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் தெரிவித்துள்ளது.