மேகேதாட்டு அணை கட்டும் ஆய்வுப் பணிகளை முடிக்க முடிவு

பெங்களூரு: ஆக. 3
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் மேகேதாட்டுவில் ரூ.9,000 கோடி செலவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணைகட்ட கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான முதல்கட்டதிட்ட வரைவு அறிக்கையை தயாரித்து மத்திய நீர்வளத்துறையிடம் சமர்ப்பித்துள்ளது. அணை கட்டுவதற்கு அனுமதி வழங்குமாறு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரியுள்ளது.
கர்நாடக அரசின் இந்த முயற்சிக்கு தமிழக அரசும் விவசாய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மேகேதாட்டு திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டுள்ளது. அதேபோல காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அமைச்சர் விளக்கம்: கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக வனத்துறை அதிகாரி மாலதி பிரியா கூறுகையில், “இந்த அணை ராம்நகர் மற்றும் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் அமையவிருக்கிறது. இங்குள்ள மரங்களை கணக்கெடுக்க பந்திப்பூர், மலை மாதேஸ்வரா, பிலிகிரி ரங்கனதிட்டு, காவிரி ஆகிய வன சரணாலயங்களை சேர்ந்த 29 வனத்துறை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.