மேகேதாட்டு திட்ட அறிக்கை

புதுடெல்லி/ பெங்களூரு: பிப்ரவரி. 2 – காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டம் அதன் தலைவர்எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது.அதில் த‌மிழக அரசின் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா பேசுகையில், ‘‘உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி உத்தரவின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா முறையாக வழங்குவதில்லை. நிகழாண்டில் ஜனவரி மாதம் வரை 90.532 டிஎம்சி நீர் இன்னும் நிலுவையில் உள்ளது. கர்நாடக அரசு உடனடியாக நீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும்’’ என்றார்.
அதற்கு கர்நாடக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங், ‘‘கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுவதால் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளது. எனவே தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், மேகேதாட்டுவில் அணை கட்டினால் இந்தபிரச்சினை தீர்ந்துவிடும். மழைக்காலங்களில் அதிகளவில் கடலில்கலக்கும் நீரை அதில் தேக்கமுடியும். அவ்வாறு செய்தால் தமிழக விவசாயிகள் பயனடைவார்கள். கர்நாடக அரசு தாக்கல் செய்த மேகேதாட்டு திட்ட அறிக்கை குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார். அதற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசின் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கர்நாடக அரசு தாக்கல் செய்த மேகேதாட்டு அணையின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையத்துக்கு அனுப்புவது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் தமிழகம்மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகள் எதிராக வாக்களித்தனர். ஆனால் பெரும்பான்மை அதிகாரிகள் மத்திய நீர் ஆணையத்துக்கு அனுப்ப வாக்களித்தனர்.
இதையடுத்து ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், ‘’கர்நாடக அரசின் மேகேதாட்டு திட்டவரைவு அறிக்கை மத்திய நீர்ஆணையத்தின் ஆலோசனைக்காக அனுப்பப்படுகிறது. அந்த ஆணையத்தின் முடிவின்பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இம்மாத இறுதிக்குள் கர்நாடக அரசு தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும்’’ என உத்தரவிட்டார்.