மேக தாது அணை கட்டியே தீர வேண்டும் – தேவகவுடா அழைப்பு

பெங்களூர், மார்ச் 25:
லோக்சபா தேர்தலுக்கான கர்நாடகா அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் மேகதாது அணையை கட்டுவோம் என்ற வாக்குறுதி இடம் பெற வேண்டும் என மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கட்சியின் நிறுவனரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா வலியுறுத்தி இருப்பது சர்ச்சையாகி உள்ளது. லோக்சபா தேர்தலுக்காக தமிழ்நாட்டில் ஆளும் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டும் கர்நாடகாவின் முயற்சிகளை முறியடிப்போம் என வாக்குறுதி தரப்பட்டுள்ளது. இது கர்நாடகாவில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் அம்மாநில துணை முதல்வருமான டிகே சிவகுமார், நீர்வளத்துறை அமைச்சராக நான் இருப்பதே மேகதாது அணையை கட்டுவதற்காகவே.. கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீரும் என்றார். ஜேடிஎஸ் நிறுவனரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவும் இதே குரலை வெளிப்படுத்தி உள்ளார். பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் தேவகவுடா கூறியதாவது: தேர்தல் அறிக்கையை மேகதாது அணையை கட்ட திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திமுகவுக்கு பதில் தர கர்நாடகாவின் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் மேகதாது அணையை கட்டுவோம் என வாக்குறுதி தர வேண்டும். திமுகவின் தேர்தல் வாக்குறுதி கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டுக்கு எதிராக கர்நாடகாவின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக போராட வேண்டும். மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் சேகர் நாப்டே ஏற்கனவே கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு எதற்கெடுத்தாலும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்கிற போக்கை கடைபிடிக்கிறது.