மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு

மேட்டூர் ஆக. 19- மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசன தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு பொய்த்து போனதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. அணையில் இருந்து தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும், அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது. இதனால் அணைக்குள் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை, கிறிஸ்துவ ஆலய கோபுரம் ஆகியவை முழுமையாக தெரிய ஆரம்பித்தது. மேலும் அணையின் நீர்தேக்க பகுதிகள் மற்றும் 16 கண் பாலம் ஆகிய இடங்கள் தண்ணீர் இன்றி வறண்டு பாளம் பாளமாக நிலம் வெடித்து காணப்படுகிறது.
பண்ணவாடி உள்ளிட்ட நீர்த்தேக்க பகுதிகளில் தண்ணீர் இன்றி புல் முளைத்து காணப்படுகிறது. அந்த பகுதிகளில் விவசாயிகள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு உள்ளனர். இந்த நிலையில் டெல்டா மாவட்டத்தில் பயிரிட்டுள்ள 3 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடியை காப்பாற்ற கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்க தமிழக அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிடப்பட்டது. மேலும் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த 3 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதே போல் இன்று காலை 8 மணி நிலவரப்படி 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 107.66 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 349 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரத்து 960 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 84 அடி உயரம் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 77.82 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1764 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து மொத்தம் 17 ஆயிரத்து 960 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.